திருவிழாக்கள்

அன்னதானம் – உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்பு

உங்களில் பெரும்பாலானவர்கள் பொதுவாக பசியை அனுபவித்திருக்க மாட்டீர்கள். ஒருவேளை, பணியின் காரணமாகவோ அல்லது உணவு தயார்செய்ய தாமதம் ஆனதன் காரணமாகவோ இரண்டு மணி நேரம் பசியை பொறுத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். அந்த சில மணி நேரங்களை பட்டினி என்ற கணக்கில் சேர்க்கமுடியாது. உண்மையான பசி என்பது பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம். இந்த பிறவியில் நான் நன்றாகவே சாப்பிடுகிறேன். ஆனால், முந்தைய பிறவிகளில் நான் அனுபவித்த பசியை மிகச் சிலரே அனுபவித்திருக்க முடியும். தாங்க முடியாத பசி, அதே நேரத்தில் தனது மேன்மையையும் நோக்கத்தையும் இழக்காமல் இருப்பது மிகச் சவாலான ஒரு விஷயம். பசி வந்துவிட்டாலே அடுத்த நொடியிலேயே நோக்கம் பறந்துபோகும். அதனால்தான், ஒவ்வொரு சன்னியாசியும் இதையே, இந்த பசியையே, ஒரு சாதனாவாக பயிற்சி செய்கிறார். பசியில் இருந்து தன்னிலையும் இழக்காமல், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் இருக்க உங்கள் மனம் சமநிலையில் இருந்தாக வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு பசி வந்துவிட்டால், உயிர் போய்க் கொண்டிருப்பதாக உணர்வார்கள். அது உண்மைதானே, தொடர்ந்து 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உயிர் மெல்ல கரையத்தானே செய்யும், இல்லையா? எனவே, அன்னதானம் என்பது உயிர்காக்கும் ஒன்று. மஹாசிவராத்திரி போன்ற இந்த தருணங்களில் அன்னதானம் என்ற ஒன்று இல்லை என வைத்துக் கொள்வோம். அப்போது தனக்காகவும் தனது குடும்ப உறுப்பினர்களுக்காகவும் உணவுக்காக செலவு செய்யமுடியாத நிலையில் இருப்பவர்களால் கலந்துகொள்ள முடியாது. மஹாசிவராத்திரி முடியும் வரை கலந்துகொள்ள விருப்பம் இருந்தாலும், செலவுகளினால் மஹாசிவராத்திரிக்கு இடையிலேயே சென்றுவிடுவார்கள், இல்லையா? போக்குவரத்துக்குக்கூட செலவு செய்ய முடியாமல் நெடுந்தூரம் நடந்து வந்து மஹாசிவராத்திரியில் கலந்துகொள்பவர்கள் இருக்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக ஏதோ ஒன்றை அர்ப்பணிப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அர்ப்பணிப்பு என்பது உணவு பற்றியது மட்டும் அல்ல. இந்த உடல் “அன்னமய கோஷா” எனப்படுகிறது. இந்த உடல் அன்னத்தால் ஆனது. எனவே, நீங்கள் உணவு அளிப்பதன் மூலம் ஒருவருக்கு உடலையே கொடுக்கிறீர்கள். மேலும் அர்ப்பணிப்பு என்பது உணவு பற்றியது மட்டும் அல்ல. இன்னொரு உயிருக்கு உணவு அளிக்கும்போது, அங்கே “ருனானுபந்தா” என்பது நிகழ்கிறது. அதாவது மிகுந்த பக்தியுடனும், அன்புடனும், ஈடுபாட்டுடனும் ஒருவருக்கு நீங்கள் உணவு பரிமாறும்போது, அந்த அடுத்த உயிருடன் உங்களுக்கு ஒரு ஆழமான தொடர்பு ஏற்படுகிறது. அதை பக்தியுடன் கொடுப்பதும் ஏன் முக்கியம் என்றால், உங்களிடமிருந்து பெறுபவர், கொடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. யாரோ ஒருவர் உங்களை தன்னைவிட உயர்ந்த இடத்தில் வைத்து உங்களிடமிருந்து உணவைப் பெற்றுக்கொள்கிறார். அதைவிட முக்கியம், ஒருவருக்கு உயிரையே அளிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை அவர் உங்களுக்குத் தருகிறார். எனவே, கொடுப்பதை வெறும் உணவாகப் பார்க்காதீர்கள். நீங்கள் ஒருவருக்கு உயிரையே அளிக்கிறீர்கள். இதை இப்படிப் பார்க்கலாம். ஒருவர் மூச்சுவிடத் திணறுகிறார். உங்களிடம் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கிறது. அதன் உதவியால் அவரை சிறிது ஆக்ஸிஜன் சுவாசிக்க வைக்கிறீர்கள். இப்போது ஆக்ஸிஜனை வெறும் காற்று என்று சொல்வீர்களா அல்லது உயிராகவே பார்ப்பீர்களா? உயிராகத்தானே பார்ப்பீர்கள்? உணவு அளித்தல் என்பதும் ஒருவருக்கு உயிரைத் தருவது போலத்தான். நான் இன்னொன்றையும் இங்கு சொல்லவேண்டும். உங்கள் முன்னால் ஒரு தட்டில் உணவு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது உணவை, “பயன்படுத்தி தூக்கியெறியும் ஒரு பொருள் போல,” நீங்கள் கருதக்கூடாது. உணவு என்பது உயிர். நீங்கள் அப்படித்தான் உணவை அணுக வேண்டும். உங்கள் வாழ்வு மேன்மையாக நடக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உணவு, நீர், காற்று, இந்த மண் ஆகிய அனைத்தையும் உயிராகவே பாவித்து நடத்தவேண்டும். ஏனெனில், இந்த மூலப்பொருட்கள் கொண்டுதான் நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை உயிராகவே அணுகினால், அவையும் உங்களுக்குள் ஒரு விதமாக செயல்படும். நீங்கள் அவற்றை வெறுமனே ஒரு பொருள்போல அணுகினால், அதற்கேற்றபடிதான் அவையும் உங்களுக்குள் செயல்படும். உணவை அர்ப்பணிப்பாக வழங்குவதால், உணவுடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. உங்களுக்கும் உணவிற்குமான தொடர்பை நீங்கள் முழுமையாக புரிந்துகொண்டால், ஒருவேளை உங்கள் தாய் அல்லது தந்தையைக்கூட நீங்கள் மிகவும் மதிப்பாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்கள் தாய், தாய்ப் பாலிலிருந்து திட உணவு வரை உங்களுக்கு தொடர்ந்து அன்னதானம் பரிமாறியதால்தான் நீங்கள் அவரை மிகவும் நேசிக்கிறீர்கள். உங்கள் தாய் உங்களை செல்லமாக முத்தமிட்டார், கொஞ்சினார், ஆனால் உங்களுக்கு உணவளித்திருக்காவிட்டால் அவருக்கு மதிப்பு அளித்திருப்பீர்களா? மாட்டீர்கள். எனவே இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. உணவளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு தாயாகவே மாற இது ஒரு அரிய வாய்ப்பு.